தேனி சின்னமனூரில் பாஜக நிர்வாகியின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகர்களின் வீடு, கடை, அலுவலகம் மற்றும் சொத்துக்கள் மீது பெட்ரோல் குண்டு வீசுதல், கல் எறிதல் போன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. இது தமிழகம் முழுவதும் நடந்து வந்த நிலையில் பல பகுதிகளில் போலீஸ் சம்மந்தப்பட்டவர்களை கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு தேனி மாவட்டம் சின்னமனூரில் பாஜகவின் பாஜக உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளராக உள்ள பிரபாகரனின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஸ்கார்பியோ காரை மர்ம நபர்கள் கல்லால் அடித்து, கண்ணாடியை உடைத்திருக்கிறார்கள். இந்த சம்பவம் குறித்து சின்னமனூர் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.
மேலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இந்து முன்னணி மற்றும் பாரதிய ஜனதா கட்சி சார்பிலும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் செய்யப்படும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு, காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.