விஜயின் மாஸ்டர் படப்பிடிப்பு நடைபெறும் என் எல் சி இரண்டாவது சுரங்கத்தில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிகில் படத்தின் வருவாய் தொடர்பாக வருமான வரித்துறையினர் நேற்று முன்தினம் முதல் AGS நிறுவனம் , பிகில் பட விநியோகஸ்தர் அலுவலகம் , பைனான்சியர் அன்புசெழியன் ஆகியோரின் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர். அதேபோல நெய்வேலி படப்பிடிப்பு தளத்திலிருந்து அழைத்து வரப்பட்ட நடிகர் விஜயிடம் அவரின் மனைவி சங்கீதாவிடம் வாங்குமூலம் பெற்றனர்.
தமிழ் திரையுலகை உலுக்கிய இந்த சோதனையில் அன்புசெழியன் மற்றும் AGS நிறுவனத்தில் இருந்து கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டது. நடிகர் விஜய் வீட்டில் 23 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சோதனை நேற்று இரவு 8 மணியளவில் முடிந்தநிலையில் இன்று விஜய் படப்பிடிப்பு தளத்துக்குச் சென்றார்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி என்எல்சி இரண்டாவது சுரங்கத்தில் நடைபெறும் படப்பிடிப்பில் விஜய் பங்கேற்றார். வருமான வரித்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்றதால் நேற்று முன்தினம் படப்பிடிப்பு ரத்தான நிலையில் விஜய் மீண்டும் இன்று காலை படப்பிப்பில் கலந்து கொண்டார்.
இந்தநிலையில் விஜயின் மாஸ்டர் படப்பிடிப்பு நடைபெறும் என் எல் சி இரண்டாவது சுரங்கத்தின் முன்பு பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாதுகாக்கப்பட்ட இடத்தில் எப்படி அனுமதி வழங்கலாம் என்று அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். என் எல் சி சுரங்கம் பகுதியில் பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். ஆகவே இதனை நிறுத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியுள்ளது.
படக்குழுவினர் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் பிப்.10 ஆம் தேதி வரை என் எல் சி இரண்டாவது சுரங்கத்தில் படப்பிடிப்பு நடத்துவதற்கு அனுமதி பெற்றது குறிப்பிடத்தக்கது.