இந்தியா – சீனா ராணுவ வீரர்கள் மோதிக்கொண்டதில் சீன நாட்டு வீரர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா – சீனா எல்லை பகுதியில் அமைந்துள்ள லடாக்கில் கால்வான் பள்ளத்தாக்கில் நேற்றிரவு இந்திய ராணுவத்திற்கும், சீன ராணுவத்திற்கும் இடையே நடைபெற்ற மோதலில் இந்தியத் தரப்பில் ஒரு ராணுவ அதிகாரியும், 2 ராணுவ வீரர்களும் வீரமரணம் அடைந்துள்ளார்கள். இதில் இந்தியா கொடுத்த பதிலடியில் சீன தரப்பில் 5 ராணுவ வீரர்கள் உயிர் இழந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சீன ராணுவ வீரர்கள் தகவல் அளித்ததாக சீன ஊடகங்களிலே இந்த செய்தி வெளியிடப்படுள்ளது. சீன ராணுவத்தைச் சேர்ந்த 5 வீரர்கள் உயிரிழந்ததாகவும், 11 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சீன அரசு ஊடகங்களிலும் இந்த தகவல் வெளியாகி இருப்பதால் இது சீன ராணுவத்தின் தகவலாக இருக்கும் என தெரிகிறது.
நேற்று நடந்த மோதல் துப்பாக்கி சண்டை அல்ல என்றும், கைகலப்பு என்றும் தெரியவந்துள்ளது. இதில் கற்களாலும், கட்டைகளாலும், இரும்புக் கம்பிகளாலும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டார்கள் என்றும் சொல்லப்படுகிறது. இந்திய வீரர்கள் சிலர் அங்குள்ள நதியில் விழுந்து விட்டதாகவும் மிகவும் குளிரான சீதோஷ்ண நிலை இருப்பதால் நதியில் விழுந்தவர்களை மீட்ட பிறகு உயிர் பிரிந்துள்ளது என்று முதல் கட்ட தகவல் வந்துள்ளன.