தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 44ஆக உயர்ந்துள்ளதாக தலைமைச்செயலர் சண்முகம் தகவல் அளித்துள்ளார். நேற்று நிலவரப்படி 27 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்திருந்த நிலையில் தற்போது எண்ணிக்கை 44ஆக உயர்ந்துள்ளது சற்று ஆறுதலை தந்துள்ளது.
தமிழகத்தில் மேலும் 77 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 834 லிருந்து 911ஆக உயர்ந்துள்ளது. இன்று உறுதி செய்யப்பட்ட 77 பேரும் தனிமைபடுத்தப்பட்ட பகுதியை சேர்ந்தவர்கள் என தலைமைச்செயலர் சண்முகம் தகவல் அளித்துள்ளார். மேலும் இன்று கொரோனா கண்டறியப்பட்டவர்களின் 5 பேர் மூலமாக கொரோனா பரவி உள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
மேலும் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 9ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தூத்துக்குடியை சேர்ந்த 73 வயது மூதாட்டி இன்று உயிரிழந்துள்ளர். கொரோனா தீவிரம் குறித்த முதல்வர் தினமும் ஆய்வுகள் மேற்கொண்டு பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு வருகிறார். ஈரோட்டில் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட நபர் மூலம் ஈரோட்டை சேர்ந்த மருத்துவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உருவாகியுள்ளது என அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? என்பது குறித்த முதலமைச்சர் பரிசீலனை செய்து வருவதாகவும், நாளை பிரதமருடன் ஆலோசித்த பிறகு தமிழக அமைச்சரவையில் முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா பரவலில் தமிழகம் இரண்டாம் நிலையில் உள்ளது. தொடர்பை கண்டறிய முடியாத அளவுக்கு வந்தால்தான் 3வது நிலையை அடைந்ததாக கருத முடியும் என தலைமை செயலாளர் தகவல் அளித்துள்ளார்.