ஈரோட்டில் கொரோனா வார்டில் உயிரிழந்தவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் தொடங்கிய கரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிராவில் அதன் பாதிப்பு அதிக அளவில் இருக்கிறது. அங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர், நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக அதிக பாதிப்பை சந்தித்து மாநிலங்களின் வரிசையில் தமிழகம் இருக்கிறது. தமிழகத்தில் 911 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் ஈரோட்டில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 60 வயது முதியவர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெருந்துறையை சேர்ந்த இவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதன் காரணமாக கடந்த 8ஆம் தேதி ஈரோடு தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் தொடர்ச்சியாக அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு தற்போது இவர் உயிரிழந்திருந்தார். இவர் கொரோனாவால் தான் உயிரிழந்துள்ளார் என்று தமிழக தலைமை செயலாளர் சண்முகம் உறுதி படுத்தினார். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது.