கிருஷ்ணகிரியில் முதல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் புட்டபர்த்தி சாய்பாபா கோவிலுக்கு சென்று திரும்பிய கிருஷ்ணகிரி நபருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பச்சை மண்டலமாக இருந்த உள்ள கிருஷ்ணகிரியில் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நேற்று வரை கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக கிருஷ்ணகிரி இருந்தது. இந்த நிலையில் கிருஷ்ணகிரியில் வேப்பனஹெள்ளி அருகே நல்லூரை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து நல்லூர் கிராமம் தடை செய்யப்பட்ட பகுதியாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவருடன் சென்ற 3 பேர், மற்றும் அவரது உறவினர்கள் 8 பேரை தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர். தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,526 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 28ஆக அதிகரித்துள்ளது.
மேலும் இன்று கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 84 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,312 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இதுவரை கொரோனா பாதிப்பு இல்லாத கிருஷ்ணகிரியில் ஒருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதியவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் தமிழகத்தின் ஒரே பச்சை மண்டலமாக இருந்த கிருஷ்ணகிரி ஆரஞ்சு மண்டலமாக மாறியுள்ளது.