கொரோனா வைரஸை கட்டுப்படுத்த இந்தியாவில் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகத்தையே மரணப்பிடியில் வைத்துள்ளது. இதனை கட்டுப்படுத்த மருந்து கண்டு பிடிக்கப்படாததால் உலக நாடுகள் திணறி வருகின்றன. லட்சக்கணக்கான மக்களை இழந்து, உலகமே அழுதுகொண்டு இருக்கின்றது. கொரோனவை முற்றிலும் ஒழிப்பதற்கான மருந்து இல்லை என்பதால் சமூகவிலகலை கடைப்பிடித்து கட்டுப்படுத்துவது தான் ஒரே தீர்வு என்பதை வலியுறுத்தி உலக நாடுகள் தங்களுடைய மக்களை வீட்டிலே முடக்கி வைத்துள்ளனர்.
இந்தியாவிலும் வருகின்ற மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, மத்திய அரசு கண்காணித்து வருகிறது. இந்தியாவில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதில் 2000க்கும் அதிகமானோர் குணம் அடைந்துள்ளனர்.
கொரோனா பாதித்து 519பேர் உயிரிழந்துள்ள நிலையில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 211 கொரோனாவால் மரணமடைந்துள்ளார். அங்கு மட்டும் 3,500க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்றுஉறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல தெலுங்கானா மாநிலத்தில் 844 பேருக்கு கொரோனா 186 பேர் குணமடைந்து 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மே 7ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதே போல மீண்டும் மே 5 ஆம் தேதி கூடி அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அமைச்சரவை ஆலோசிக்க திட்டமிட்டுள்ளது.