தோனி ஓய்வு குறித்து எந்த தகவலும் இல்லை என்று பிசிசிஐ விளக்கமளித்துள்ளதால் ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் 2016ஆம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டி குறித்து பதிவிட்டிருந்தார். தோனியுடன், விராத் கோலி வெற்றிக்களிப்பில் இருப்பது போன்ற படத்தையும் பதிவிட்டிருந்தார். விராட் கோலியின் இந்த பதிவு தோனி தன்னுடைய ஓய்வை குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளார் என்பதை உணர்த்தும் வகையில் இருப்பதாக ரசிகர்கள் வேதனை அடைந்தனர்.
மேலும் இன்று மாலை 7 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாகவும் , அப்போது தனது ஓய்வு முடிவை அவர் அறிவிப்பார் என்றும் செய்திகள் பரவி வந்தன. இந்நிலையில் தோனி ஓய்வு அறிவிப்பு குறித்து எந்த தகவலும் இல்லை என இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் எம்எல் கே பிரசாத் தெரிவித்திருக்கிறார்.இதனால் ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.