அதிமுக சார்பில் இன்று நடைபெறவிருந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காவல்துறை சார்பில் இருந்து அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அதிமுகவினர் இன்று காலை சுமார் 9 மணி அளவில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் என அனைவரும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டார்கள்.
அப்போது அங்கு பாதுகாப்புக்காக சுமார் 500க்கு அதிகமான காவல் துறையினர் குவிக்கப்பட்டு இருந்தார்கள். காவல் துறை அனுமதி இல்லாத காரணத்தினால் சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுகவினர் அனைவருமே கைது செய்யப்பட்டு சென்னை எழும்பூரில் இருக்கக்கூடிய ராஜரத்தினம் மைதானத்தில் தற்போது வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இந்த நிலையில் அவர்களுக்கு காலையிலிருந்து காவல்துறை சார்பில் குடிநீர் மற்றும் உணவு வழங்கப்பட்ட நிலையிலும் கூட அவர்கள் அதை வேண்டாம் என்று மறுத்துவிட்டு தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.