உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தந்தை ஆனந்த் சிங் பிஷ்த் உடல்நலக்குறைவால் காலமானார்.
உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தந்தை ஆனந்த் சிங் பிஷ்த், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தார். 68 வயதாகும் ஆனந்த் சிங் பிஷ்த் வயது மூப்பு காரணமாக தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை மோசமடைந்ததையடுத்து மார்ச் 15ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. இந்நிலையில் நேற்று அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்தது. கடந்த சில நாள்களாகவே அவரது உடல்நிலை மிகவும் மோசமானதால் அவருக்கு நேற்று டயாலிசிஸ் செய்யப்பட்டது. இதனையடுத்து அவருக்கு வென்டிலேட்டர் பொருத்தப்பட்டு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது.
மருத்துவர்களும், செவிலியர்களும் தொடர்ந்து அவரது உடல்நிலையை கண்காணித்து வந்த நிலையிலும் அவரின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் அளித்தன. இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி காலமானார். இந்த தகவலை மாநில கூடுதல் செயலாளர் செயலாளர் அவனிஷ் கே அவஸ்தி உறுதிசெய்துள்ளார். இதையடுத்து பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.