கொரோனா தடுப்பு நடவடிக்கைகளாக ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தொழிலாளர்களுக்கு சில அறிவிப்புகளை அறிவித்துள்ளார்.
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. கடந்த சில நாட்களாக இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு வேகமாக பரவி வருகின்றது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 370 ஆக உயர்ந்த நிலையில் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றது. இந்தியாவில் மட்டும் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
இந்திய அரசாங்கம் இதனை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விமான, இரயில் போக்குவரத்து சேவை நிறுத்தம், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
மேலும் இம்மாத இறுதிவரை (மார்ச் 31) பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுவருகின்றன. முக்கியமாக மக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து நாட்டின் பொருளாதாரம் மட்டும் தினக்கூலியை நம்பி இருக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கியுள்ளது. இதனால் பல்வேறு மாநில அரசுக்கள் தொழிலாளர் நலன் கருதி பல்வேறு அறிவிப்புகளை அறிவித்து வருகின்றன.
அண்டை மாநிலமான கேரளா 20,000 கோடி அளவிற்கு திட்டம் அறிவித்துள்ள நிலையில் ஆந்திர மாநில தொழிலாளர்களின் குடும்பத்திற்கு ஆயிரம் ரூபாய் பணமும், இலவச ரேசன் பொருட்களும் வழங்கப்படும் என்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்திருக்கிறார்.