கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணத்தையடுத்து பள்ளியில் நடைபெற்ற கலவரம், தீவைப்பு சம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு போலீசார் அப்பகுதியை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். இதில் அப்பாவிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறி, அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க அரசு உத்தரவிடக்கோரி மதுரை சேர்ந்த வழக்கறிஞர் ரத்தினம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் மாணவி மரணம் தொடர்பாக வழக்கில் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆசிரியை கிருத்திகாவை அதே சிறையில் அடைக்கப்பட்டுள்ள பள்ளி செயலாளர் மிரட்டுவதாகவும், அதனால் அவரை உடனடியாக திருச்சி சிறைக்கு மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.
மேலும் சட்டவிரோதமாக சிறையில் அடைக்கப்படுவதை தவிர்க்க கைதானவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் போது அவர்களுக்கு தேவையான சட்ட உதவியை மாவட்ட சட்ட பணிகள் ஆணையக் குழு மூலம் வழங்க அனைத்து மாஜிஸ்ட்ரேட்டுகளுக்கும் அறிவுறுத்தும் படி உயர்நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
காணாமல் போனவர்களை அல்லது அவர்களுடைய இருப்பிடம் தெரியாமல் இருப்பதை கண்டுபிடித்து தரக்கூடியதற்காக தாக்கல் செய்யப்படும் ஆட்கொணர்வு மனுவாக அவர் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவானது இன்றைய தினம் சென்னை உயர்நீதிமன்ற நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், இழப்பீடு கோரிக்கையுடைய மனுவை ஆட்கொணர்வு மனுவாக விசாரிக்க முடியாது என்பதால் இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்ன கூறி, நீதிபதிகள் இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டு இருக்கிறார்கள். மேலும் மனுதாரரின் கோரிக்கை தொடர வேறு வழக்காக வேண்டுமானால் தாக்கல் செய்யலாம் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தி இருக்கின்றனர்.