டெல்லி வன்முறையில் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய ஷாருக் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
வடகிழக்கு டெல்லியில் ஏற்பட்ட கடுமையான கலவரத்தின் போது ஒருவர் துப்பாக்கியை காட்டி போலீஸ் வீரர் ஒருவரை மிரட்டும் காட்சி பல்வேறு ஊடகங்களிலும் வெளிவந்திருந்தது. இதன் காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீசாரையே துப்பாக்கியை காட்டி மிரட்டும் அளவுக்கு நிலைமை கட்டுக்கடங்காமல் போய் இருக்கிறது. சம்பந்தப்பட்ட நபர் யார் யார் ? எப்படி இவ்வளவு தைரியமாக துப்பாக்கியை காட்டி போலீஸாரை மிரட்டினார். அந்த துப்பாக்கியை பயன்படுத்தி வேறு யாரையும் தாக்கினாரா ? என்ற பல்வேறு கேள்விகள் எழுந்திருந்தன நிலையில் அவர் பெயர் ஷாருக் என்ற தகவல் வெளிவந்தது.
இதையடுத்து போலீசாரின் விசாரணையில் அவருடைய குடும்பத்திற்கு குற்றப்பின்னணி இருப்பதும் தெரியவந்தது. ஷாருக்கின் தந்தை போதை மருந்து வியாபாரம் தொடர்பான ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்டவர் என்றும் , ஷாருக்கின் உறவினர் ஒரு வன்முறை கும்பலுக்கு தலைவர் என்றும் போலீசாருக்கு தெரியவந்தது. ஆனாலும் ஷாருக்கை கைது செய்ய முடியாமல் போலீசார் தொடர்ந்து தேடி வந்தார்கள். அவர் இருக்கும் இடம் தெரியாமல் அவரின் குடும்பத்தினர் மற்றும் பலரிடம் விசாரணை செய்து வந்தனர்.
இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தில் அவர் ஒளிந்து இருப்பதாக தகவல் வந்ததையடுத்து உத்தரபிரதேசத்தில் பதுங்கி இருக்கும் அவரை உத்திரபிரதேச போலீசார் உடன் சேர்ந்து டெல்லி போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் அவர் சிக்கியிருக்கிறார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பரேலி நகரில் அவர் கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.