மங்களூர் நகரில் கடந்த சனிக்கிழமை அன்று 19ஆம் தேதி நடைபெற்ற ஆட்டோ வெடிகுண்டு சம்பவத்த்தை தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க தற்போது அதிகாரப்பூர்வமாக ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்ற பிறகு இந்த ஆட்டோவில் பயணித்த பயணியான ஷாரிக் என்பவர் தான் தீவிரவாதி எனவும், அவர்தான் குக்கர் குண்டு எடுத்துச் சென்று வெடிக்க முயற்சித்ததாக கர்நாடக காவல்துறை அதிகாரிகள் தங்களது விசாரணையின் அடிப்படையில் தெரிவித்தார்கள்.
குற்றவாளி இவன்தான் என்பது கண்டுபிடிக்கப்பட்ட பிறகு இந்த வழக்கில் அனைத்து ஆவணங்களையும் கர்நாடக போலீசார் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தார்கள். இந்த வழக்கில் தொடர்பான ஆவணங்கள் அனுப்பிவைக்கப்பட்ட இரண்டே நாளில்…. நேற்று மாலை இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரிப்பார்கள் என்று கர்நாடகா அரசு சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 24 மணி நேரத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் NIA அதிகாரிகளுக்கு இந்த வழக்கை விசாரிக்க தற்போது அதிகாரபூர்வமாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே NIA அதிகாரிகள் மங்களூர் நகரில் முகாமிட்டு, இந்த வழக்கு தொடர்பான விசாரணையை துரிதமாக நடத்தி வந்தார்கள்.
மறுபுறம் இந்த வழக்கின் குற்றவாளியாக கருதப்படும்ஷாரிக் என்பவர் தொடர்ந்து மருத்துவமனையில் பேச முடியாமல் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் இன்னும் ஓரிரு வாரங்களில் குணமடைந்த பிறகு அவரிடம் NIA அதிகாரிகள் முறையாக விசாரணை மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு இஸ்லாமிக் ரெசிஸ்டன்ஸ் கவுன்சில் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.