Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: ரஜினி வழக்கில் மதியம் 2:30 மணிக்கு தீர்ப்பு.!!

துக்ளக் விழாவில் பெரியார் குறித்து சர்ச்சையாக ரஜினிகாந்த் பேசியது தொடர்பான வழக்கில் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் இன்று மதியம் 2:30 மணிக்கு  தீர்ப்பு வழங்குகிறது.

கடந்த ஜனவரியில் துக்ளக் இதழ் சார்பில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், பெரியார் குறித்து பேசியது சர்சையை ஏற்படுத்தியது. சேலத்தில் திராவிடர் கழகம் சார்பாக பெரியார் நடத்திய மாநாட்டில் இந்து கடவுள்களின் சிலைகளுக்கு செருப்பு மாலை போடப்பட்டதாகவும் ,  கடவுளில் உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலம் எடுத்துச் சென்றதாகவும் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். ரஜினியின் இந்த கருத்துக்கு திராவிட கழகங்கள் கண்டனம் தெரிவித்தன.

ரஜினி ஆதாரம் இல்லாமல் பேசுகின்றார் என்று பல்வேறு குற்றசாட்டு முன்வைக்கப்பட்டு ரஜினிக்கு எதிராக போராட்டம் நடத்தி, ரஜினி மன்னிப்பு கேட்கவேண்டுமென்று  கோரிக்கை விடுத்தனர். ஆனால், நான் பேசியதில் இருந்து பின்வாங்க போவதில்லை, மன்னிப்பு கேட்க முடியாது என்று பேசிய கருத்தில் ரஜினி உறுதியாக இருந்தார். ரஜினிக்கு எதிராக பல்வேறு காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட  தலைவர் உமாபதி, நடிகர் ரஜினிகாந்த் பெரியார் பற்றி அவதூறுகளை பரப்பி அவர் பெயருக்கும் களங்கம் விளைவித்துள்ளார் என்று  திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் கடந்த ஜனவரி 18ம் தேதி புகார் அளித்திருந்தார். ஒருமாதம் ஆகியும் ரஜினி மீதான புகாருக்கு காவல்துறை நடவடிக்கை எடுக்காததால் உமாபதி நீதிமன்றத்தை நாடினார்.

சென்னை எழும்பூரில் உள்ள 2ஆவது  பெரு நகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ரஜினி மீது கொடுத்த புகாரில் காவல்துறை ஒரு மாதம் ஆகியும் வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்று மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை பலகட்டங்களாக விசாரித்த நீதிமன்றம் ரஜினிமீது வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் இருக்கின்றதா ? என்பது குறித்த அறிக்கையை காவல்துறையினரிடம் கேட்டிருந்தது.காவல்துறை சார்பில் கொடுக்கப்பட்ட அறிக்கையை நீதிபதிகள் ஆய்வு செய்தனர்.

இதையடுத்து வழக்கின் தீர்ப்பு  நேற்று  வழங்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்துஇருந்தனர். இதனிடையே நீதிமன்றத்தையும், சட்டத்தையும் தவறாக பயன்படுத்தும் நோக்கில் ரஜினி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளதாக ஆறுமுகம் என்பவர் இடையீட்டு மனு தாக்கல் செய்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி ரோஸ்லின் ரஜினி மீதான வழக்கில்  இன்று தீர்ப்பு வழங்கப்படுவதாக அறிவித்தார் . இந்நிலையில் இன்று காலை தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது  மதியம் 2:30 மணியளவில் உத்தரவு வழங்கப்பட இருக்கிறது.

Categories

Tech |