ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு குறித்து பதிலளிக்குமாறு காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.
தமிழகத்தில் சென்னை, விழுப்புரம், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட ஒன்பது இடங்களில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி கோரி தமிழக உள்துறை அமைச்சகம் மற்றும் டிஜிபியிடம் கடந்த மாதம் அனுமதி கோரப்பட்டதாகவும், அதை மீது எந்த முடிவும் எடுக்கப்படாததால் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி கோரி சென்னையைச் சேர்ந்த ஆர்எஸ்எஸ் பிரமுகரான சுப்பிரமணியன் மற்றும் 9 பகுதிகளை சேர்ந்த ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்கள்.
அந்த மனவில், ஊர்வலத்தை ஒழுங்குபடுத்த மட்டுமே காவல்துறைக்கு அதிகாரம் உள்ளதாகவும், அனுமதி மறுக்க காவல்துறைக்கு அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கப்படும் நிலையில், தமிழகத்தில் மட்டும் அனுமதி மறுக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவானது இன்றைய தினம் நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்த போது, காவல்துறை தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி கோரிய மனு குறித்து வரும் 22ஆம் தேதி முடிவெடுத்து, சம்பந்தப்பட்டவர்களிடம் தெரிவிக்கப்படும் என கூறினார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி எதிர்மனுதாரர்களாக தமிழக டிஜிபி மற்றும் உள்துறை அமைச்சகம் ஆகியோர் பதிலடிக்க உத்தரவிட்டு வழக்கினுடைய விசாரணையை 22ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார்.