சாத்தான்குளம் மரண வழக்கில் காவல்துறை நிகழ்த்திய கொடூரம் தற்போது அம்பலமாகியுள்ளது.
சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பான வழக்கு இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்தபோது, நீதித்துறை நடுவர் பாரதிதாசன் தனது அறிக்கையை தாக்கல் செய்தார். அதில் பல்வேறு அதிர்ச்சி விஷயங்களைக் குறிப்பிட்டு இருந்தார். குறிப்பாக ஜெயராஜ், பென்னிக்ஸ்சுக்கு நடந்த துயரம் குறித்து சாட்சியங்கள் சொல்லிய வாக்கு மூலம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது என அவர் கூறினார்.
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நடந்த கொடூரத்தை அங்குள்ள பெண் காவல் அதிகாரி வாக்குமூலமாக கொடுத்துள்ளார். அவர் கொடுக்கும் போது மிகுந்த பயத்துடன் இருந்தார்.அங்கு அசாதாரண சூழல் நிலவி இருந்தது. காவலர்கள் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. பெண் காவலரின் பாதுகாப்பை உறுதி செய்த பின்னர்தான் அவர் தனது வாக்குமூலத்தை அளித்தார்.
அதில் ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும் காவலர்கள் கொடூரமாக அடித்துள்ளனர். விடிய விடிய லத்தியால் அடுத்தனர். லத்தியில் ரத்தக்கறையும், மேசையில் ரத்த கறையும் இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார். இங்கு அதிகாரிகள் ஆதாரங்களை அழிக்கும் முயற்சியில் இருப்பதாகவும் மிகுந்த பயத்துடன் அவர் தெரிவித்திருந்தார். பின்னர் அந்த பெண் காவல் அதிகாரி அளித்த வாக்குமூலத்தை எழுத்துப்பூர்வமாக எடுக்கும்போது அதில் கையெழுத்திடும் போது கூட பெண் அதிகாரி பயந்து கொண்டே மறுத்தார். அவரது பாதுகாப்பை உறுதி செய்வதாக வலியுறுத்திய பின்னரே அவரிடம் கையெழுத்து வாங்கப்பட்டது என்று நீதித்துறை நடுவர் தனது அறிக்கையில் மாஜிஸ்ட்ரேட் குறிப்பிட்டுள்ளார். இது இந்த வழக்கிற்கான அடுத்தடுத்து பெரிய திருப்பங்கள் ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.