இளம்பெண் சுவாதி 2016 ஆம் ஆண்டு ரயில் நிலையத்தில் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக திருநெல்வேலியை சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவர் மின்சார வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த விகாரம் தொடர்பாக பத்திரிகைகளில் வெளியான செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது.
இந்த வழக்கு ஆணைய உறுப்பினர் ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்த போது ஆஜரான புழல் சிறையின் வார்டன் வாக்குமூலத்தில் ராம்குமார் மின்சார வயரை கடித்தபோது தள்ளி காப்பாற்ற முற்பட்டோம் என வாக்குமூலத்தில் தெரிவித்தார். இவரின் வாக்குமூலத்தை கேட்டு பரிசீலித்த ஆணையம் பிறப்பித்த உத்தரவில், சிறையில் குறைந்த ஊழியர்களே உள்ளதால் ராம்குமார் மரணத்திற்கு அவர்களை மட்டுமே குறை சொல்ல முடியாது எனவும், அரசுக்கும் இதில் பொறுப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சிறையில் போதிய அளவில் அதிகாரிகளை நியமிக்க வேண்டியது அரசின் கடமை என தெரிவித்துள்ள ஆணையம், ராம்குமார் மரணம் தொடர்பாக உண்மையை கண்டறிய சுதந்திரமான விசாரணை தேவை எனவும் தெரிவித்துள்ளது. ராம்குமார் மரணத்திற்கு இழப்பீடாக அவரது தந்தைக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீட்டை ஒரு மாத காலத்துக்குள் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ள மாநில மனித உரிமை ஆணையம், சிறையில் கைதிகளுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய போதுமான அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பரிந்துரை அளித்துள்ளது.