டெல்லி வன்முறைக்கு காவல்துறையின் மெத்தன போக்கே காரணம் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
குடியுரிமை திருத்த சட்டமசோதாவுக்கு எதிராக டெல்லி ஷாகின்பாக் பகுதியில் நடைபெறும் போராட்டத்திற்கு எதிராகவும் , டெல்லியில் நடைபெற்ற வன்முறை தொடர்பாகவும் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் ஷாகின்பாக் பகுதியில் நடைபெறும் போராட்டம் குறித்த வழக்கில் போராட்டக்காரர்களை இடமாற்றுவது தொடர்பாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவும் போலீசுக்கு உத்தரவிட்டு மார்ச் 23ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து டெல்லியில் இரண்டு தினங்களாக நடைபெற்று வரும் கடுமையான வன்முறை தொடர்பான வழக்கை விசாரணைக்கு ஏற்பதா அல்லது மறுப்பது என்பது தொடர்பாக ஏதும் சொல்லவில்லை. ஆனால் இதுதொடர்பாக வழக்குகள் ஏற்கனவே டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இருப்பதன் காரணமாக முதலில் டெல்லி உயர்நீதிமன்றம் அந்த வழக்குகளை விசாரிக்கும் என்று சொல்லிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் கடும் அதிருப்தியை தெரிவித்தனர்.
அதில் , டெல்லியில் நடைபெற்ற வன்முறை என்பது நடந்திருக்கக் கூடாது. எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல.இது ஒரு துரதிஷ்டவசமான சம்பவமாக தான் நாங்கள் பார்க்கின்றோம் என்று வேதனை தெரிவித்த நீதிபதிகள், டெல்லி காவல்துறையினர் மெத்தன போக்கே பிரச்சனைக்கு காரணம் என்று தெரிவித்தனர். அவர்களின் செயல்பாடுகளில் எந்தவிதமான ஒரு கட்டமைப்பும் இல்லாதது தான் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணமாக இருந்திருக்கிறது. வன்முறை வெடித்ததால் எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை உடனடியாக எடுத்திருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.