தனி நபரின் செல்போன் விவரங்களை வாட்ஸ்அப் நிறுவனம் பரிமாற்றம் செய்யாது என தற்போது அறிவித்துள்ளது.
சமிபத்தில் வாட்ஸ்அப்பில் சில விதிமுறைகள் மாற்றப்பட்டது. இதில் வாட்ஸ் அப்பை நீங்கள் திறந்ததும் உங்களுக்கு ஒரு அறிவிப்பு வெளியாகியிருக்கும். அதற்கு சம்மதம் தெரிவித்தால் மட்டுமே வாட்ஸ் அப்பை நீங்கள் பயன்படுத்த முடியும். இல்லையெனில் உங்களது கணக்கு முடக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
தற்போது பலரும் வாட்ஸ் அப்பில் இருந்து வெளியேற நினைப்பதற்கும் அந்த அறிவிப்பு தான் முக்கிய காரணம். அதாவது உங்களின் தனிப்பட்ட தகவல்களை அதன் விளம்பர நோக்கங்களுக்காக பயன்படுத்தலாமா என்று தான் அந்த அறிவிப்பில் அனுமதிக் கேட்கப்பட்டது. இதற்கு மறுப்பு தெரிவிக்கும் பட்சத்தில் உங்களின் கணக்கு முடக்கப்படும் என தெரிவித்திருந்தது.
தற்போது தனி நபரின் செல்போன் விவரங்கள் இருப்பிட முகவரி பேஸ்புக்கிற்கு பரிமாற்றம் செய்யப்படாது என வாட்ஸ்அப் நிறுவனம் சற்றுமுன் அறிவித்துள்ளது. மேலும் பயனாளர்களின் தனிப்பட்ட மெசேஜ், அழைப்பு விவரங்களை சேமித்து வைக்க மாட்டோம் என்றும், வாட்ஸ்அப் குறிப்புகள் தனித்தன்மையுடன் தொடர்ந்து செயல்படும் எனவும் வாட்ஸ்அப் அறிவித்துள்ளது.