மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் அஜித் பவார் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
மகாராஷ்டிரா_வில் கூட்டணி அமைத்து வெற்றி பெற்ற பாஜக மற்றும் சிவசேனா ஆகிய இரு கட்சிகளின் இடையே இருந்த முதல்வர் பதவி பகிர்வில் பாஜக உடன்படாததால் யாரும் ஆட்சி அமைக்க முன்வர வில்லை. இதை தொடர்ந்து பாஜக – சிவசேனா கூட்டணி முறிந்தது.அதே நேரத்தில் சிவசேனா , காங்கிரஸ் , தேசியவாத காங்கிரஸ் இணைந்து ஆட்சி அமைக்க முயற்சித்து வந்தன.
இதை தொடர்ந்து கடந்த சனிக்கிழமை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை குழு தலைவர் அஜித் பவாரை பயன்படுத்தி ஆட்சி அமைக்கும் முடிவில் களமிறங்கிய பாஜக ஆளுநர் முன்னிலையில் ஆட்சி அமைத்தது. இதில் தேவிந்திர பட்னாவிஸ் முதல்வராகவும் , அஜித் பவார் துணை முதல்வராகவும் பொறுப்பேற்றனர்.
இதனையடுத்து பாஜக ஆட்சி அமைத்ததற்கு எதிராக சிவசேனா , காங்கிரஸ் , தேசியவாத காங்கிரஸ் உச்சநீதிமன்றத்தை நாடினர். இதில் நாளை பாஜக பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.இதனால் அதிர்ச்சி அடைந்த பாஜக செய்வதறியாது உள்ளது.
இந்த சூழ்நிலையில் தான் மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதல்வராக பொறுப்பேற்ற அஜித் பவார் தனது பதவியை ராஜினாமா செய்தார். முதல்வர் பட்னாவிஸ்ஷை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். பதவியேற்ற 4 நாட்களில் அஜித் பவார் ராஜினாமா செய்ததை தொடர்ந்து இன்னும் சில நேரத்தில் முதல்வர் பட்னாவிஸ் செய்தியாளர்களை சந்திக்க இருக்கின்றார். இதில் பட்னாவிஸ் தனது பதவியை ராஜினாமா செய்வதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.