நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
சென்னை தண்டையார்பேட்டை சேர்ந்த மாணவர் உதித் சூர்யா நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பான வழக்கில் உயர்நீதி மன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் கோரி மனு செய்திருந்தார். அவர் கைது செய்யப்பட்டதால் முன்ஜாமீன் மனுவை ஜாமீன் மனுவாக விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணை கடந்த முறை வந்தபோது தேனி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த மாணவன் உதித் சூர்யாவின் தந்தை வெங்கடேசனின் ஜாமீன் மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு மாற்ற நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞ்சர் மாணவனின் தந்தை வெங்கடேசன் முறைகேட்டிற்கு துணையாக இருந்தவர்கள் குறித்து முழு தகவல்களையும் தெரிவிக்க வில்லை, விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதி இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கண்டறிவது அவசியம் என தெரிவித்தார். அதேபோல வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்காத நிலையில் எதற்காக ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் கேள்வி எழுப்பினார்.
அதற்கு மனுதாரர் தரப்பில் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட போது தனக்கு தெரிந்த தகவல்களை வழங்கி விட்டதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து நீதிபதி இந்த வழக்கில் பார்க்கும்போது வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் திட்டமிட்டதை போல தெரிகின்றது என்று தெரிவித்து மாணவன் உதித் சூர்யாவின் வயது , மன அழுத்தம் , எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது என்று நீதிபதி தெரிவித்தார்.மேலும் நிபந்தனை ஜாமின் வழங்க பட்டுள்ளதால் மாணவர் உதித் சூர்யா தினமும் காலை 10.30 மணிக்கு மதுரைமாவட்ட சிபிசிஐடி துணை கண்காணிப்பாளர் முன்பாக ஆஜராக வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்து அவருடைய தந்தை வெங்கடேசனின் ஜாமீன் மனுவை ரத்து செய்து உத்தரவிட்டார்.