செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தமிழ்நாடு முழுவதும் விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் பொதுமக்களிடையே மனுஷ்மிருதி நூல் விலை இல்லாமல் வழங்கப்படுகிறது. தலைமையிலிருந்து ஒரு லட்சம் பிரதிகள் அச்சிடோம், அதுமட்டுமின்றி ஆங்காங்கே இயக்கத் தோழர்கள் முன்னணி பொறுப்பாளர்கள், அவரவர் பொறுப்பில் 10,000, 20,000 என்று ஏராளமான நூல்களை அச்சிட்டு மக்களுக்கு வழங்குகின்றனர்.
காலை 10:00 மணியில் இருந்து நண்பகல் 1 மணி வரையிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்து சமூகத்தில் நலன்களுக்காக, குறிப்பாக பெண்களின் விழிப்புணர்வுக்காக, இந்த நடவடிக்கை நாங்கள் மேற்கொண்டு இருக்கிறோம். மனுஷ்மிருதி என்பது இந்துக்களின் வேத நூலாக இருக்கிறது, வழிகாட்டு நெறியாக இருக்கிறது, இந்த சமூக கட்டமைப்புக்கு அதுவே அடிப்படை கோட்பாடாகவும் இருக்கிறது.
அதன் அடிப்படையில் தான் இந்து சமூகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் இந்திய அரசியலமைப்பு சட்டம் 1950-ல் நடைமுறைக்கு வந்தாலும் கூட, இன்னும் சமூக தளத்திலும், பண்பாட்டு தளத்திலும் 100% ஆளுமை செலுத்துவது மனுஷ்மிருதி தான். மனுஸ்மிருதியின் அடிப்படையில் தான் குடும்பம் இயங்குகிறது, மனுஸ்ருதியின் அடிப்படையில் தான் குடும்ப நிகழ்வுகள், சடங்குகள், சம்பிரதாயங்கள் அனைத்தும் நிகழ்கின்றன.
திருமணம் உள்ளிட்ட ஈம சடங்குகள் வரையில் இந்து சமூகத்தில் பின்பற்றப்படுகின்ற அனைத்துமே மனுஷ்மிருதி வழிகாட்டுதலின்படி தான் நடக்கிறது. பார்ப்பன வர்ணத்தில் இருந்து, சூத்திர வர்ணம் வரையிலும் நான்கு வர்ணத்தை சார்ந்த பெண்மணிகள் அனைவரும் 50 விழுக்காடாக இருக்கின்ற மக்கள் தொகையில், 50 விழுக்காடு ஆக இருக்கின்ற பெண்கள் அனைவருமே சூத்திரர்களாக நடத்தப்பட வேண்டும் என்பது மனுஷ்மிருதியின் வழிகாட்டுதல் ஆகும்.
ஆகவே இது தொடர்பான விழிப்புணர்வை மக்களிடையே உருவாக்க வேண்டும் என்கின்ற அடிப்படையில், இன்றைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சிகளின் சார்பில் இதனை விநியோகம் செய்கிறோம். அதற்கு முக்கியமான காரணம் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் நடவடிக்கைகளை மக்களுக்கு அம்பலப்படுத்த வேண்டும் என்பதுதான் என தெரிவித்தார்.