விழுப்புரம் நீதிமன்றத்தில் விடுதிக் காப்பாளர் பணிஇடமாற்றத்திற்கு ரூபாய் ஒரு லட்சம் லஞ்சம் கேட்ட வழக்கில் 7 ஆண்டுகளுக்குப் பின்பு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே ஐடிஐ மாணவ விடுதியில் காப்பாளராக அதியமான் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான விடுதியில் காப்பாளராக பணியாற்ற விரும்பி இடமாறுதல் அளிக்கக் கோரி கடந்த 2013ம் ஆண்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அதிகாரியான வந்தவாசி என்பவரை அணுகினார்.
இடமாறுதலுக்கு ரூபாய் ஒரு லட்சம் லஞ்சம் கேட்கவே என்னால் முடியாது என்று அதியமான் கூறியுள்ளார். இதை தொடர்ந்து ‘குறைந்தபட்சம் 50 ஆயிரம் பணம் கொடுத்தால் மட்டுமே இடமாறுதல் அளிக்க முடியும் என்று அவர் கூற லஞ்ச ஒழிப்புத் துறையிடம் அதியமான் புகார் அளித்தார். பின் அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் ரசாயனம் தடவிய பணத்தை வந்தவாசி வீட்டிற்கே சென்று அதியமான் கொடுக்க,
அதிகாரிகள் அவரை கையும் களவுமாக கைது செய்தனர். இந்த வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் கடந்த 7 ஆண்டுகளாக நடைபெற்று வர வழக்கு நடைபெற்று வந்த அந்த சமயத்திலேயே வந்தவாசி பணியில் இருந்து ஓய்வும் பெற்றார். இந்நிலையில் நேற்று வழக்கிற்கான தீர்ப்பை விழுப்புரம் நீதிமன்றம் நீதிபதிகள் அளித்தனர். அதில், அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூபாய் 10 ஆயிரம் அபராதமும் விதித்தனர். ரூபாய் பத்தாயிரத்தை அவர் கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை அவருக்கு வழங்குமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.