தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் தெலுங்கு திரையரங்குகளில் வாரிசு படம் பொங்கல் அன்று ரிலீஸ் ஆவதற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் பொங்கல் பண்டிகையின் போது தெலுங்கு படங்களுக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.
இதனால் வாரிசு படத்திற்கு தியேட்டர்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் தற்போது தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகள் தமிழில் பிரச்சனையின்றி ரிலீஸ் ஆகும் போது தமிழ் படங்களுக்கு கட்டுப்பாடு விதிப்பது எவ்விதத்தில் நியாயம் என பலரும் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில் சீமான் வாரிசு படம் தெலுங்கில் ரிலீஸ் ஆகவில்லை என்றால் வேறு எந்த மொழி படங்களும் தமிழகத்தில் ரிலீஸ் ஆகாது என்று கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது இயக்குனர் பேரரசு வாரிசு படத்தின் தெலுங்கு ரிலீஸ் சிக்கலுக்கு கண்டனங்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இயக்குனர் பேரரசு கூறியதாவது, நாங்கள் எல்லா மொழிகளையும் ஒன்றாக தான் பார்க்கிறோம். நாங்கள் எல்லோரையும் திராவிடர்களாக பார்க்கும் நிலையில் எங்களை மட்டும் தமிழர்களாக தான் பார்க்கிறார்கள்.
நாங்கள் மொழியை பிரித்து பார்க்காத போது நீங்கள் பிரித்துப் பார்த்து தேவையில்லாமல் தூண்டி விடுகிறீர்கள். இது ஒரு சாதாரண பிரச்சனை கிடையாது. இது மானப் பிரச்சனை. பொங்கலன்று தெலுங்கில் வாரிசு ரிலீஸ் ஆகவில்லை என்றால் தமிழகத்தில் எந்த பண்டிகைக்கும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்கள் ரிலீஸ் ஆகாது என்று காட்டமாக கூறியுள்ளார். மேலும் வாரிசு படத்தின் சிக்கல் காரணமாகத்தான் தளபதி விஜய் நேற்று ரசிகர்களை சந்தித்தார் என்றும் கூறப்படுகிறது.