காஷ்மீர் விவாதத்தில் இந்தியா பிரதமர் குறித்து விமர்சனம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரிட்டன் நாடாளுமன்றத்தில் காஷ்மீர் குறித்து விவாதம் நடைபெற்றது. இது ‘காஷ்மீரில் மனித உரிமைகள்’ என்ற தலைப்பில் பேசப்பட்டது. இந்த தீர்மானமானது பிரிட்டன் நாடாளுமன்ற மக்களவையில் அனைத்துக் கட்சியைச் சேர்ந்த பிரதிநிதிகள் முன்பு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இதற்கு இந்தியா கடுமையாக கண்டனம் தெரிவித்து பேசியுள்ளது. அதாவது “இந்திய நாட்டின் உள்ள அனைத்துப் பகுதிகள் குறித்து எந்த இடத்தில் விவாதம் நடைபெற்றாலும் நம்பத்தகுந்த உண்மை தகவல்கள் அடிப்படையில் மட்டும் தான் நடத்தப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளது. மேலும் இந்த தீர்மானத்திற்கு ஆசியாவுக்கான காமன்வெல் வெளியுறவுத்துறை அமைச்சரான அமண்டா மில்லிங் பதில் கூறியுள்ளார்.
அதில் “காஷ்மீர் குறித்த தீர்மானம் என்பது இரு நாடுகள் தொடர்புடையது. இந்த விவகாரத்தில் பிரிட்டன் அரசின் முடிவு குறித்து எந்தவொரு மாற்றமும் இல்லை. இதனை பிரட்டன் அரசு தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது. இருப்பினும் இதில் மக்களின் விருப்பமே மிகவும் முக்கியம். இதனால் இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து தான் இறுதியான மற்றும் நிலையான அரசியல் தீர்வை எடுக்க முடியும். பிரிட்டன் அரசினால் எந்தவித தீர்வும் அளிக்க முடியாது. குறிப்பாக இதில் பிரிட்டன் நடுநிலையாளராக செயல்பட முடியாது” என்று கூறியுள்ளார். மேலும் இந்த விவாதத்தின் போது காஷ்மீர், பிரதமர் மோடி, 2002 குஜராத் கலவரம் போன்ற அனைத்து பிரச்சினைகள் குறித்தும் பாகிஸ்தானை பூர்விகமாக கொண்ட தொழிலாளர் கட்சி எம்.பி.யான நாஸ் ஷா சர்ச்சையாக பேசியுள்ளார்.
இதற்கு பிரிட்டன் அரசு வருத்தம் தெரிவித்துள்ளது. இது குறித்து லண்டனில் இருக்கும் இந்தியா தூதரகத்தை சேர்ந்த அமைச்சர் ஒருவர் கூறியதில் “உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான இந்தியாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி ஒருவரை பற்றி தவறாக கூறுவதற்கு பிரிட்டன் நாடாளுமன்றத்தை கருவியாக செயல் படவைத்ததற்காக மிகவும் வருந்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார். குறிப்பாக காஷ்மீர் குறித்து கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் விவதாம் நடைபெற இருந்தது. ஆனால் அது கொரோனா தொற்று பரவல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. அதிலும் தற்பொழுது நடந்த விவாதத்தில் பல்வேறு கட்சிகளைச் சார்ந்த 20 எம்பிக்கள் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.