பிரிட்டன் மகாராணியார், இம்மாதம் 8-ஆம் தேதி மரணமடைந்ததை தொடர்ந்து கடந்த வருடம் மரணமடைந்த தன் கணவர் இளவரசர் பிலிப்புடன் இணைந்திருக்கிறார்.
பிரிட்டன் மகாராணியார் இரண்டாம் எலிசபெத்தின் இறுதி சடங்கு இன்று நடக்கிறது. மகாராணியாரின் காதல் கணவரான இளவரசர் பிலிப் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி அன்று மரணமடைந்தார். அன்று தனக்கு ஆறுதல் கூற எவரும் இன்றி தேவாலயத்தில் தனியாக அமர்ந்திருந்த மகாராணியாரின் புகைப்படம் வெளியாகி மக்களை கலங்க செய்தது.
மகாராணியார் தன் கணவர் மீது அதிக காதல் கொண்டிருந்தவர். அவர் மறைவுக்குப் பின் தான் உறுதியுடன் இருப்பதாக அவர் காண்பித்துக் கொண்டார். எனினும், கணவரின் பிரிவு பேரிழப்பாக அவருக்கு இருந்தது. தன் கணவரின் உடல் வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு அருகேயே இருக்க வேண்டும் என்று வின்ஸ்டர் மாளிகையில் தங்கினார்.
உடல் நலம் பாதிப்படைந்தாலும் இறுதி மூச்சு உள்ளவரை நாட்டிற்கான தன் கடமைகளை சரிவர செய்து வந்தவர் மகாராணியார். இந்நிலையில் இம்மாதம் எட்டாம் தேதி அன்று உடல்நல குறைவு காரணமாக மரணமடைந்தார். அதன்படி, தன் காதல் கணவர் உயிரிழந்து 18 மாதங்கள் கழித்து வின்ஸ்டர் மாளிகையில் இருக்கும் புனித ஜார்ஜ் தேவாலயத்தில் தன் கணவரின் உடலுக்கு அருகே அவரின் சவப்பெட்டி வைக்கப்படவிருக்கிறது.
அதனைத்தொடர்ந்து, மகாராணியார் மற்றும் அவரின் கணவர் இளவரசர் பிலிப் ஆகிய இரண்டு பேரின் உடல்களும் மன்னர் ஆறாம் ஜார்ஜ் நினைவு தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட இருக்கிறது.