பிரித்தானிய மாணவர் ஒருவர் வேண்டுமென்றே ஆப்கானிஸ்தானுக்கு சென்று தற்போது நாடு திரும்ப முடியாமல் சிக்கி தவிக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவில் உள்ள பிர்மிங்காம் என்ற நகரத்தில் வசித்து வரும் மைல்ஸ் ரௌட்லெட்ஜ் (21) எனும் மாணவன் கடந்த வாரம் விடுமுறையை கொண்டாடுவதற்காக கூகுளில் “மிகவும் ஆபத்தான நாடு” என்று தேடி பிடித்து ஆப்கானிஸ்தானுக்கு சென்றுள்ளார். ஏற்கனவே ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆதிக்கம் அதிகரித்து வருவதால் பிரித்தானிய அரசாங்கம் அந்நாட்டில் இருக்கும் தங்கள் நாட்டு மக்களை உடனடியாக வெளியேறும் படி எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில் ரௌட்லெட்ஜ் ஆப்கானிஸ்தானுக்கு சென்றதோடு, தலிபான்கள் காபூலை கைப்பற்ற சிறிது நாட்கள் ஆகும் என்று அலட்சியமாக இருந்துள்ளார். ஆனால் தலிபான் பயங்கரவாதிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து ஆட்சியை பிடித்துள்ளனர். எனவே ரௌட்லெட்ஜ் “ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருவதாகவும், தலையில் புர்கா அணிந்தே காபூல் விமான நிலையத்திற்கு செல்ல முடிந்தது.
இருந்த போதிலும் கலவரம் அதிகமாக காணப்பட்டதால் மீண்டும் ஒரு பாதுகாப்பான இடத்திற்கு மீண்டும் வந்து சேர்ந்து விட்டேன்” என்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதோடு மட்டுமில்லாமல் காபூலில் உள்ள பிரித்தானிய தூதரகத்திற்கு ரௌட்லெட்ஜ் “எப்படியாவது உயிருடன் வீட்டுக்கு திரும்பி சென்று விடவேண்டும்” என்று வேண்டிக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.