கொரோனா வைரஸ் தொற்று இருப்பதால் பிரிட்டனின் சுகாதார அமைச்சர் நாடின் டோரீஸ் தனி வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் நகரில் முதன் முதலாக பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் இத்தாலி, ஈரான், தென் கொரியா, பிரிட்டன் உட்பட 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் குடியேறி அச்சுறுத்தி வருகின்றது. இதுவரையில் கொரோனவால் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகியிருக்கின்றனர். மேலும் 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், தென் கொரியா ஆகிய நாடுகளில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. ஆனால் தற்போது சீனாவில் முன்பை விட கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் குறைந்து வருகிறது.
இந்நிலையில் பிரிட்டனில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை 3 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 373 பேருக்குக் கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரிட்டன் சுகாதாரத்துறை அமைச்சரான நாடின் டோரீசுக்கு (Nadine Dorries) கடந்த வெள்ளிகிழமையன்று திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
இதன் காரணமாக தேசிய சுகாதார திட்ட அதிகாரிகள் அவரது இரத்த மாதிரியை பரிசோதித்தபோது, அவர் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதைக் கண்டறிந்தனர். அதைத்தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் சிகிச்சை பெற்று வருவதாகவும், உடல்நிலை தேறி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.