ரோர் (Roar), ஃபயர் வொர்க் (Fire work), ஐ கிஸ்ட் ஏ கேர்ள் (I kissed a girl) உள்ளிட்ட பிரபல பாப் பாடல்கள் மூலம் உலகமெங்குமுள்ள பாப் இசை உலக ரசிகர்களைத் தன்னுடைய தனித்துவக் குரலால் வசீகரித்து வருபவர் கேட்டி பெர்ரி. இவரைச் சமீபத்தில் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் தன் தொண்டு நிறுவனங்களில் ஒன்றான பிரிட்டிஷ் ஆசிய தொண்டு நிறுவனத்தின் புதிய தூதராக நியமித்துள்ளார்.
பிரிட்டிஷ் ஆசிய தொண்டு நிறுவனத்தின் முக்கியத் திட்டங்களுள் ஒன்றான குழந்தைகள் பாதுகாப்பு நிதியைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கேட்டி பெர்ரி செயல்படவிருக்கிறார். இதுகுறித்து இளவரசர் சார்லஸ், அவரது மனைவி கேமில்லா ஆகியோருடன் இரவு விருந்து ஒன்றில் சந்தித்துக் கலந்துரையாடிய கேட்டி, தான் இளவரசர் சார்லஸின் ரசிகை என்றும் சார்லஸ் தன்னை அவரது தோட்டத்துச் செடிகளுக்காகப் பாடல் ஒன்றைப் பாட முடியுமா எனக் கேட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
கேட்டியுடனான இந்த உடன்படிக்கைக் குறித்து தனது மகிழ்ச்சியைப் பதிவுசெய்துள்ள இளவரசர் சார்லஸ், இந்த நிறுவனத்தின் மூலம் நிதித் திரட்டப்பட்டு, தெற்கு ஆசியாவில் குழந்தைகள் கடத்தலுக்கு எதிராக ஆக்கப்பூர்வமான திட்டங்களில் உபயோகப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
குழந்தைகள் சந்திக்கும் பல்வேறு அத்துமீறல்கள், பாதிப்புகளை தான் யுனிசெஃப் நிறுவனத்தின் தூதராக நியமிக்கப்பட்டது தொடங்கியே கண்காணித்து வருவதாகவும் சார்லஸ் இந்தத் திட்டத்தின்மூலம் ஆக்கப்பூர்வமான முன்னெடுப்புகளை நிச்சயம் மேற்கொள்வார் என்றும் தெரிவித்துள்ளார்.
பிரிட்டிஷ் ஆசிய தொண்டு நிறுவனத்தின் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது தொடங்கி, இதுவரை இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த 4.8 மில்லியன் மக்கள் இதன்மூலம் பயன்பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.