பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆப்கானிஸ்தானில் நேட்டோவின் பணிக்கு நியமிக்கப்பட்ட அனைத்து பிரிட்டிஷ் படைகளும் தற்போது நாடு திரும்புவதாக தகவல் வெளியிட்டுள்ளார்.
பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் ஹவுஸ் ஆப் காமன்ஸில் உரையாற்றிய போது ஆப்கானிஸ்தானில் நேட்டோவின் பணிக்கு நியமிக்கப்பட்ட அனைத்து பிரிட்டிஷ் படைகளும் தற்போது நாடு திரும்புவதாக கூறியுள்ளார். ஆப்கானிஸ்தானில் அல்கொய்தா மற்றும் தலீபானுக்கு எதிரான போர் காரணமாக நோட்டோ சர்வதேச நாடுகளின் கூட்டுப்படை கடந்த 20 வருடங்களாக ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ளன. மேலும் வருகின்ற செப்டம்பர் 11-ஆம் தேதிக்குள் ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்க படைகள் வெளியேறிவிடும் என்று அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் உள்ள பாக்ராம் விமானத்தளத்தை விட்டு நேட்டோ மற்றும் அமெரிக்காவின் கடைசி படைகள் வெளியேறியுள்ளன.
இதற்கிடையே ரஷ்யா, ஆப்கானிஸ்தானிலிருந்து தனது படைகளை வெளியேற்றுவதன் மூலம் அமெரிக்கா தோல்வியை ஒப்புக் கொண்டதாக விமர்சனம் செய்துள்ளது. இந்த நிலையில் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆப்கானிஸ்தானில் பிரித்தானிய படையின் நேட்டோ நடவடிக்கைகளுக்கான பங்களிப்பு முடிவுக்கு வருவதாக தெரிவித்துள்ளார். இதற்கிடையே இங்கிலாந்து ராணுவ தலைவர் நிக் கார்ட்டர் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளிநாட்டுப் படைகள் வெளியேறுவதால் தற்போது அங்கு உள்நாட்டுப் போர் தீவிரமடையும் அபாயம் உள்ளதாக கூறியுள்ளார்.