மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மதுக்கரை பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு வரும் 9-ஆம் தேதி திருமணம் நடத்துவதற்காக அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக நடைபெற்றுள்ளது. இவருக்கு தனியார் மருத்துவமனையில் ஊழியராக பணி புரியும் வேலுச்சாமி என்ற சகோதரர் இருந்துள்ளார். இந்நிலையில் சக்திவேல் வேலுச்சாமியுடன் திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் பொள்ளாச்சி நோக்கி புறப்பட்டுள்ளார். இதனையடுத்து தாமரை குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது மழை பெய்ததால் சகோதரர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளை நான்கு வழி சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு மழை கோட்டு அணிந்து கொண்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற சொகுசு கார் சகோதரர்களின் மீது பலமாக மோதி விட்டது. இதனால் படுகாயமடைந்த இருவரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே வேலுசாமி உயிரிழந்துவிட்டார். மேலும் சக்தி வேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சொகுசு கார் டிரைவரான முத்துசாமி என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.