கோவை திமுக கூட்டத்தில் மக்களின் குறைகளை கேட்ட அக்கட்சியின் தலைவரிடம், லாவண்யா என்ற கர்ப்பிணி பெண், அதிமுகவின் ஊராட்சி மன்றத் தலைவர் தன்னை தாக்கி தனது கர்ப்பம் கலைய காரணமாக இருந்ததாகப் புகார் கூறினார்.
ஆட்சி அமைந்தவுடன் மக்களின் குறைகளை முதல் 100 நாட்களில் தீர்ப்பதே தனது முதல் பணியெனக் கூறி கூட்டங்கள் தோறும் மக்களிடம் புகார் மனுக்களை பெற்று வருகிறார் ஸ்டாலின். இதனைப் பார்த்த முதல்வர் பழனிசாமி, புகார்களை தொலைபேசி வாயிலாக என்னிடம் கூறலாமென அறிவித்தார். “ ஜெயலலிதா அறிவித்த திட்டத்தையே புதிது போல அறிவிக்கிறார். இது கூடத் தெரியாமல் 4 ஆண்டுகளாக முதலமைச்சராக இருந்துள்ளார்.” என ஸ்டாலின் அவரை விமர்சித்தார்.
இந்நிலையில் கோவையில் திமுக கூட்டத்தில் அவரிடம் புகார் மனு அளித்த லாவன்யா என்ற கர்ப்பிணி பெண், ஊரடங்கு சமயத்தின்போது பிழைப்புக்காக வெளியே சென்றிருந்த தனது தந்தையை வி.என்.ரவி என்ற அதிமுக ஊராட்சி மன்றத் தலைவர் அடித்து அவமானப்படுத்தியதாகக் கூறினார். அது தொடர்பாகப் போலீஸில் புகாரளித்ததற்காக வீட்டிற்கு வந்து எங்கள் அனைவரையும் தாக்கினார்கள். அப்போது எனக்குக் கருக்கலைவு ஏற்பட்டது. அண்ணனாக நினைத்து உங்களிடம் உதவி கேட்கிறேன். அவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என்றார்.
இதை கேட்ட ஸ்டாலின், கருக்கலைவு ஏற்பட்டிருப்பது என்பது கோரமான நிகழ்ச்சி. வருத்தப்பட வேண்டிய நிகழ்வு. பெண்களுக்கு எதிரான அதிமுக அயோக்கியர்களை வந்தவுடன் முதல் வேளையாகச் சிறையில் பிடித்து போடுவேன். அண்ணன் என்று அழைத்துள்ளீர்கள் உங்களுக்குப் பாதுகாவலனாக நான் இருப்பேன் என்றார். உடனே கூட்டத்தினர் விசிலடித்து கைத்தட்டினர்.