ஆடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டி சென்ற இரண்டு சகோதரர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சின்ன செங்காடு கிராமத்தில் முனுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாஸ்கரன் மற்றும் ஹரிஹரன் என்று இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் இந்த இரண்டு சிறுவர்களும் தனது பெற்றோருக்கு உதவியாக ஆடுகளை அருகில் இருக்கும் வயல் காட்டிற்குள் ஓடி சென்று மேய்த்து வருவர். இதனையடுத்து காலையில் வழக்கம்போல முனுசாமி தான் நடத்தி வரும் இருசக்கர வாகனம் பழுதுபார்க்கும் கடைக்கு சென்றுவிட்டார். மேலும் முனுசாமியின் மனைவி வேலைக்கு சென்றதால் சகோதரர்கள் இருவரும் ஆடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டி சென்றனர்.
இந்நிலையில் மதிய உணவிற்கு ஆடு மேய்க்க சென்ற மகன்கள் வீட்டிற்கு வராததால் சந்தேகம் அடைந்த தாயார் இருவரையும் வயல்காட்டு பகுதியில் தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை. இதனை அடுத்து அப்பகுதியில் உள்ள ஏரியில் பொதுமக்கள் இறங்கி தேடியபோது தண்ணீருக்குள் சிறுவர்கள் மூழ்கி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதன்பின் இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் சிறுவர்களை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த அனக்காவூர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.