கடலில் மூழ்கி அண்ணன், தம்பி இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வள்ளியூர் பகுதியில் ஜான்சன் அருள் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து கொண்டிருந்தார். இவருக்கு ரெனிஸ் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு அக்னஸ் ராய், பிரவீன் ராய் என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தனது மனைவிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் ஜான்சன் சொந்த ஊருக்கு வந்துள்ளார். அதன்பின் கடந்த மாதம் 30-ஆம் தேதி ரெனிஸ் உயிரிழந்து விட்டார். இதனையடுத்து ஜான்சன், தனது மகன்கள் மற்றும் உறவினர்களுடன் மனைவிக்கு சடங்கு செய்வதற்காக அந்தோனியார் ஆலயத்திற்கு சென்றுள்ளார். இதனையடுத்து கடலில் குளித்துக் கொண்டிருக்கும் போது அக்னஸ் ராய் மற்றும் பிரவீன் ஆகிய இருவரும் ராட்சத அலையில் சிக்கி தண்ணீரில் மூழ்கி விட்டனர்.
இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் மீனவர்களின் உதவியோடு 2 பேரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சகோதரர்களை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் இருவரும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று இரண்டு பேரின் சடலத்தையும் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.