பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் அனைவரும் துரோகிகள் எனவும், அந்த நிறுவனத்தில் பணிபுரியும் 88,000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் எனவும் கர்நாடக மாநில பாஜக எம்பி ஒருவர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் உத்தர கனடா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆனந்த் குமார் ஹெக்டே நேற்று குண்டா பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டர். அப்போது பேசிய அவர் பி.எஸ்.என்.எல் நிறுவனம் நாட்டின் கரும்புள்ளியாக மாறி விட்டதாகவும், அந்த நிறுவனத்தை தனியார் மயமாக்க மத்திய அரசு தயாராக உள்ளதாகவும் தெரிவித்தர். மேலும் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணிபுரியும் 88,000 ஊழியர்கள் விரைவில் பணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என தெரிவித்த அவர்,
அந்த நிறுவனத்தை தனியார் மயமாக்கி ஒழுங்குபடுத்த திட்டமிட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். அவரது இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது இந்த கருத்தை கர்நாடக மாநில பாஜக வும் ஆதரித்துள்ளது. ஹெக்டேவின் கருத்துக்கள் உண்மையானது எனவும் பி.எஸ்.என்.எல் ஊழியர்களின் திறமையின்மை குறித்து, அவர் கூறியிருப்பதாகவும் கர்நாடக மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் திரு. பிரகாஷ் தெரிவித்துள்ளார்.