அரசின் பொதுத்துறை தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனம் விருப்ப ஓய்வு திட்டம் ஒன்றை அமல்படுத்தியுள்ளது.
பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம், கடும் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளதால், கடந்த பிப்ரவரி மாதம் முதலே ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாமல் திணறி வருகிறது. இதனால், ஊழியர்களுக்கான விருப்ப ஓய்வு திட்டத்தை பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிர்வாகம் அறிவித்தது. இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்தவும் மத்திய அரசு அறிவுறுத்தியது.
இந்த விருப்ப ஓய்வு திட்டத்துக்கு, 50 வயது மற்றும் அதற்கும் அதிகமான வயதுடைய ஊழியர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. பணியில் இருந்த ஆண்டுகளை கணக்கிட்டு, ஆண்டுக்கு 35 நாட்கள் ஊதியம் இழப்பீடாக வழங்கப்படும் என்றும், ஓய்வு பெறும் வயதுவரை 25 நாட்களுக்கான ஊதியம் ஓய்வூதியமாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இத்திட்டம் கடந்த 3-ம் தேதி தொடங்கப்பட்டது. இதில், டிசம்பர் 4-ம் தேதி வரை ஊழியர்கள் விருப்ப ஓய்வு பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நீண்ட காலம் பணியில் இருக்கும் ஊழியர்கள் தாமாக முன்வந்து விருப்ப ஓய்வெடுக்கும் பட்சத்தில் சிறப்பான சலுகைகளுடன் கூடிய பணிக்கொடை அளிப்பதாகத் தெரிவித்தனர். இதையடுத்து இந்த திட்டத்துக்குத் தகுதியாக உள்ள சுமார் ஒன்றரை லட்சம் ஊழியர்களில் சுமார் 77 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இதனிடையே மத்திய அரசு கொண்டுவந்த இத்திட்டத்திற்கு எதிராக நாடு தழுவிய போராட்டத்தை பி.எஸ்.என்.எல் ஊழியர் சங்கம் இன்று நடத்திவருகிறது. விருப்ப ஓய்வை நோக்கி ஊழியர்களைத் தள்ளுவது தவறான அணுகுமுறை என்றும், விருப்ப ஓய்வுக்குப் பல ஊழியர்களை நிர்வாகம் கட்டாயப்படுத்துவதாகக் குற்றம்சாட்டி இந்தப் போராட்டத்தை நடத்திவருகிறது ஊழியர் சங்கம்.
விருப்ப ஓய்வு திட்டத்தின் மூலம் தன்னுடைய சம்பள செலவில் 7 ஆயிரம் கோடி ரூபாய் மிச்சப்படுத்த பி.எஸ்.என்.எல் திட்டமிட்டுள்ளது.