டெக்சாஸ் பகுதியில் 14 வயதுள்ள மார்செலா கோன்சலஸ் (Marceala Gonzalez) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாகப் பக்கில்ஹெட் மாடு ஒன்று இருக்கிறது. இந்த மாட்டினுடைய கொம்பின் நீளம் 11 – அடியும், அகலம் 1.8 அங்குலம் இருக்கும் என அளவிடப்பட்டுள்ளது.
கடந்த அக். 4-ஆம் தேதி ஒக்லஹோமாவில் நடைபெற்ற ஹார்ன் ஷோகேஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற பக்கில்ஹெட் மாடு, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த மாடு அதிகாரப்பூர்வமற்ற முறையில் கின்னஸ் உலக சாதனையை முறியடித்துள்ளது என தகவல்கள் வெளிவந்துள்ளது.
மார்செலாவுக்கு 5 ஆண்டுக்கு முன்பு ஓவியப் போட்டியில் பரிசாகத் தான் பக்கில்ஹெட் மாடு கிடைத்துள்ளது. ஆனால் அந்த மாடு உலக சாதனையில் பெயர் பதிக்கும் எனக் கண்டிப்பாக அந்த சிறுமி நினைத்திருக்க மாட்டார்.
இது குறித்து மார்செலாவின் தாயார் கூறுகையில், “பக்கில்ஹெட் மாடு ஒரு ஆண்டில் 12 முதல் 15 நிகழ்ச்சிகளில் பங்கேற்கும். இதனை அழைத்து கொண்டு செல்லும்போது மிகவும் பாதுகாப்பாகப் பார்த்துக் கொள்வோம். முக்கியமாக மாட்டின் கொம்பில் அடிபடாமல் இருப்பதற்கு பாதுகாத்துக்கொள்ள கொம்பின் நுனியில் டென்னிஸ் பந்துகளை வைத்துக் கட்டிவிடுவோம்” எனத் தெரிவித்தார். பக்கில்ஹெட்டின் உரிமையாளர் மார்செலா கின்னஸ் சாதனை அலுவலர்களுக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். இதனால் வருகின்ற 2020-ஆம் ஆண்டு கின்னஸ் புத்தகத்தின் புதிய பதிப்பில் பக்கில்ஹெட் மாடு இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.