இந்த ஆண்டில் ஒலிம்பிக் நடக்கவுள்ளதால் இந்திய வீரர், வீராங்கனைகளுக்காகவும், விளையாட்டுக்காகவும் மத்திய பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என அனைத்து தரப்பினராலும் எதிர்பார்க்கப்பட்டது. இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் எதிர்பார்த்ததைப்போல் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் ரூ.50 கோடி விளையாட்டுத் துறைக்கு அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது, கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட ரூ. 2776.92 கோடியை விட, இந்த ஆண்டு ரூ. 50 கோடி அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால் மத்திய அரசின் திட்டமான கேலோ இந்தியாவுக்கு இந்த ஆண்டு கூடுதலாக ரூ. 291.42 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் மற்ற விளையாட்டு சம்மேளங்கள், ஃபெடரேஷன்கள், ஸ்போர்ட்ஸ் அதாரிட்டி ஆஃப் இந்தியா ஆகியவை பாதிப்பை சந்தித்துள்ளன.
கேலோ இந்தியா விளையாட்டு கிராமப்புற மற்றும் கீழ்நிலையில் இருக்கும் திறமையான இளைஞர்களை அடையாளம் காண்பதற்கான திட்டமாகும். இந்தத் திட்டத்திற்கு அதிகமான நிதிகள் ஒதுக்கப்பட்டதால், மற்ற விளையாட்டுத்துறையினருக்கு கிட்டதட்ட ரூ. 55 கோடி முதல் ரூ. 5 கோடி வரை நிதி குறைக்கப்பட்டுள்ளது.
-
தேசிய விளையாட்டுக் கூட்டமைப்புக்கு கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட ரூ. 300 கோடி, இந்த ஆண்டு ரூ. 245 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.
-
விளையாட்டு வீரர்களுக்கான ஊக்கத்தொகை வழங்குவதற்கான நிதி கடந்த ஆண்டு ரூ. 111 கோடியாக இருந்தது. இந்த ஆண்டு ரூ. 70 கோடியாக குறைத்துள்ளது.
-
இதேபோல் தேசிய விளையாட்டு மேம்பாட்டுக்கான நிதி ரூ. 77.15 கோடியிலிருந்து, ரூ. 50 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.
-
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்திய விளையாட்டு ஆணையத்திற்கான நிதியும் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்திய விளையாட்டு ஆணையத்திற்கு ஒதுக்கப்பட்ட ரூ. 615 கோடி, இந்த ஆண்டு ரூ. 500 கோடியாக குறைந்துள்ளது.
-
2010ஆம் ஆண்டு நடந்த காமன்வெல்த் கேம்ஸின் போது கட்டப்பட்ட மைதானங்களை தொடர்ந்து பராமரிப்பதற்கான நிதியை ரூ. 96 கோடியிலிருந்து ரூ. 75 கோடியாக குறைத்துள்ளது.
-
விளையாட்டு வீரர்களுக்கான தேசிய மேம்பாட்டு நிதியகத்துக்கு கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட ரூ. 2 கோடியே இந்த ஆண்டும் தொடர்கிறது.
-
இதேபோல் ஜம்மு – காஷ்மீரில் விளையாட்டினை ஊக்குவிப்பதற்காக கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட ரூ. 50 கோடியே, இந்த ஆண்டும் மாற்றமில்லாமல் தொடர்கிறது.
-
தேசிய அளவிலான லக்ஷ்மி பாய் உடற்கல்வி மையத்திற்கு மட்டும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ரூ.5 கோடி உயர்த்தப்பட்டு, ரூ. 55 கோடியாக ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.