நாடு முழுவதும் பெண்கள் அனைத்து துறைகளிலும் இரவு நேர பணியில் ஈடுபட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய வரலாற்றில் முதல் முறையாக டிஜிட்டல் வடிவில் மத்திய நிதிநிலை அறிக்கையை மூன்றாவது முறையாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். அதன் பிறகு அவர் ஆற்றிய உரையில், “கொரோனாவால் பொருளாதாரம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் மக்கள் சிரமப்படாமல் இருக்க ஏழைகள் நலவாழ்வு நிதி உதவியை பிரதமர் மோடி தொடங்கினார்.
காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் மூலம் மத்திய அரசுக்கு 140 கோடி மிச்சமாகும். பொது முடக்கத்தை அமல்படுத்தாமல் இருந்திருந்தால் கொரோனாவால் மிகப் பெரும் சேதத்தை சந்தித்திருக்க நேர்ந்திருக்கும். பொது விநியோகத் திட்டத்தின் கீழ் தானியங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. கொரோனா காலத்தில் பணியாற்றிய முன் களப் பணியாளர்களுக்கு நன்றி” என அவர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து பல்வேறு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி அனைத்து துறைகளிலும் பெண்களை பணியமர்த்தவும், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் நிலையில் பெண்கள் இரவு நேர பணியில் ஈடுபடவும் அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும் அமேசான் மற்றும் சொமேட்டோ உள்ளிட்டவற்றில் டெலிவரி பணியில் ஈடுபடும் பணியாளர்கள் மற்றும் சாலையோர பணியாளர்களுக்கும் சமூக பாதுகாப்பு திட்டங்கள் விரிவுபடுத்தப்படும். அனைத்துப் பிரிவு பணியாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.