2021 ஆம் ஆண்டின் பட்ஜெட் பிப்ரவரி 2 ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த பட்ஜெட்டில் பல்வேறு துறை சார்ந்தவர்களுக்கும் எதிர்பார்ப்புகள் நிலவிவருகிறது.
ராணுவ வீரர்கள், விவசாயிகள் மற்றும் பொது மக்கள் என அனைவரும் தங்களுக்கு இந்த பட்ஜெட்டில் ஏதாவது சிறப்பு சலுகைகள் இருக்கும் என்று அதிக நம்பிக்கை கொண்டுள்ளார்கள். நிதியமைச்சரும் இது குறித்து சுட்டிக்காட்டியியுள்ளார். ஆகையால் இந்த முறை பட்ஜெட் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் என்று பரவலாக நம்பப்படுகின்றது.
அந்த வகையில் விவசாயிகளுக்கு இந்த பட்ஜெட் மீது என்னென்ன எதிர்ப்பார்ப்புகள் உள்ளது எனப் பார்க்கலாம்.
இந்த பட்ஜெட்டில் விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. நாட்டின் மொத்த ஜிடிபியில் விவசாயத்தின் பங்கு 16%ஆக உள்ளது. நாட்டின் முதுகெழும்பே விவசாயம்தான். ஆகையால் இம்முறை விவசாயத்துறையை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்படலாம் என்ற எதிர்பார்ப்பி நிலவிவருகிறது.
2022ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த மத்திய அரசு முன்னதாகவே இலக்கு நிர்ணயித்திருந்தது. அந்தவகையில் ஒவ்வொரு பட்ஜெட்டிலும், வேளாண் உற்பத்திக்கான கடன் இலக்கை உயர்த்தி வருகிறது. அது இந்த பட்கெட்டிலும் உயர்த்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் சென்ற 2016-17ஆம் ஆண்டைப் போல் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவிவருகிறது.
தற்போது விவசாயிகளுக்கு பிரதமர் கிசான் யோஜனாவின் (PMKSYN) கீழ் வருடத்திற்கு ரூ.6000 வழங்கப்பட்டுவருகிறது. இதன் அளவை ரூ .6000 லிருந்து ரூ .10,000 ஆக அரசு உயர்த்தக்கூடும் என்று கூறப்படுகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் அறிக்கையும் இந்த எதிர்பார்ப்பின் அடிப்படையாக பார்க்கப்படுகிறது.
அதேபோல், விவசாயிகள் தொடர்பான பிற திட்டங்களுக்கான ஒதுக்கீடுகளும் அதிகரிக்கப்படலாம் என வட்டாரங்காள் தெரிவிக்கின்றன.