இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் அனைத்து கோயில்களின் வரவு செலவு கணக்கு வரும் ஜூலை 1ஆம் தேதி இணையத்தில் வெளியிடப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததை தொடர்ந்து, இந்து சமய அறநிலை துறை அமைச்சராக சேகர்பாபு பொறுப்பேற்றுக்கொண்டார். இதன்பிறகு, சட்டவிரோதமாக கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. கோவில்களின் வரவும் செலவுகள் அனைத்தும், மக்கள் அனைவருக்கும் தெரியப்படுத்தும் வகையில் இருக்க வேண்டும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
அதன்படி இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் வரவு செலவு கணக்குகள் வரும் ஜூலை 1ஆம் தேதி இணையத்தில் வெளியிடப்படும் என்று கூறியுள்ளார். இதில் கோவில்களுக்கு ஆண்டுதோறும் வரக்கூடிய வருமானம், செலவு உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இடம் பெறும். மேலும் கோவில் நிலங்கள் மற்றும் அதன் உரிமை ஆவணங்கள் தொடர்பாகவும் மக்கள் அறிந்துகொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.