புதுச்சேரி மாநில அரசின் 2019-20 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியதும் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
புதுச்சேரி மாநில அரசின் 2019- 2020 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் சட்ட பேரவையில் தொடங்கி, கவர்னர் கிரண்பேடி உரையாற்றி வருகிறார். வருகின்ற 28-ந் தேதி முதல்வர் நாராயணசாமி ரூ. 8,425 கோடிக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என்று சொல்லப்படுகிறது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்தலாம் என்பது பற்றி அலுவல் ஆய்வுக்குழு ஒன்றிணைந்து முடிவு செய்ய உள்ளது.
பட்ஜெட் கூட்டத்தொடர் கூட்டம் தொடங்கியதும் அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து வெளிநடப்புக்கு பின் அதிமுக சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் பேசும்போது, ”கடந்த 3 ஆண்டு காலமாக மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்தாத ஆளுகின்ற காங்கிரஸ் அரசை கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்தோம்” என்று கூறினார்.