ஊருக்குள் புகுந்த காட்டு எருமை பெண் ஒருவரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கன்னிகாதேவி காலனியில் சந்திர மோகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தானலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சந்தானலட்சுமி தனது வீட்டில் உள்ள குப்பைகளை கொட்டுவதற்காக வெளியே உள்ள குப்பை தொட்டிக்கு அருகில் சென்றபோது, அங்குள்ள புதரின் பின்னால் மறைந்து நின்று கொண்டிருந்த காட்டெருமை திடீரென வெளியே வந்து சந்தானலட்சுமியை விரட்டி உள்ளது. இதனால் அவர் அங்கிருந்து தப்பி ஓடுவதற்குள் காட்டெருமை அவரை துரத்தி சென்று முட்டி தாக்கியதில் அவர் பலத்த காயம் அடைந்துள்ளார்.
இதனையடுத்து அவரது அலறல் சத்தம் கேட்டதால் ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அந்த காட்டெருமையை வனப்பகுதிக்குள் விரட்டி விட்டுள்ளனர். அதன்பின் சந்தானலட்சுமியை மீட்டு கோத்தகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த வனக்காப்பாளர் வீரமணி மற்றும் கோத்தகிரி வனவர் சக்திவேல் மருத்துவமனைக்கு சென்று சந்தானலட்சுமிக்கு ஆறுதல் கூறியதோடு, அப்பகுதிக்குள் காட்டெருமை நுழையாமல் தடுப்பதற்காக தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.