சேலம் மாவட்டத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் வாகனங்களை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலத்தை அடுத்த நெத்திமேடு காலனியில் நெருக்கமான குடியிருப்பு பகுதிகளுக்கு இடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐந்து மோட்டார் சைக்கிள் வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீயை பற்ற வைத்துவிட்டு தப்பி சென்றுவிட்டனர். சத்தம் கேட்டவுடன் வெளியே வந்த பொதுமக்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் வாகனத்தில் பெட்ரோல் இருந்ததன் காரணமாக தீயை அணைக்க முடியவில்லை. பின் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இருந்த போதிலும் அவற்றில் ஐந்து மோட்டார் சைக்கிள் வாகனங்கள் தீயில் எரிந்து கருகி போகின
இதனையடுத்து அருகே உள்ள எஸ்.கார்டன் பகுதியிலும் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று மோட்டார் சைக்கிள் வாகனங்களுக்கு மர்ம நபர்கள் நீ பற்ற வைத்து தப்பிச் சென்றுள்ளனர் . இந்நிலையில் நேற்று இரவு 8 மோட்டார் சைக்கிள் வாகனங்கள் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளன . சம்பவம் நடைபெற்ற பகுதியில் சிசிடிவி கேமராக்கள் எதுவும் இல்லாததால் மர்ம நபர்களை கண்டறிய முடியவில்லை இருப்பினும் பாதிக்கப்பட்டோர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்