துக்ளக் பத்திரிகை 50ஆவது ஆண்டு விழாவில் பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்தோடு மட்டுமல்லாமல் ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் என எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று ரஜினி கூறியதால் இந்த விவகாரம் மேலும் வலுப்பெற்றுவருகிறது.
இந்நிலையில் தேனியில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தர்பார் திரைப்படம் திரையிடப்பட்ட வெற்றி திரையரங்கம் முன்பு ரஜினிகாந்த் உருவ பொம்மையை எரித்து ஆதித்தமிழர் பேரவையினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 30-க்கும் மேற்பட்டோரை கைது செய்ய முயன்றபோது காவல் துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வலுக்கட்டாயமாக காவல் துறையினர் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.