ஆம்னி பேருந்து ஓட்டுனரின் அலட்சிய போக்கால் நால்வர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள எழும்பூரிலிருந்து மதுரை செல்லும் தனியார் ஆம்னிபேருந்து ஈ.வி. கே. எஸ். சாலை வழியாக வந்துள்ளது. அப்போது பேருந்தின் மேல்பகுதியில் கயிறு தொங்கியுள்ளது. இதனை யாரும் கவனிக்கவில்லை. இந்நிலையில் சென்னை மாவட்ட காவல்துறை ஆணையர் அலுவலகத்தை பேருந்து நெருங்கிய சமயத்தில் கவனிக்கப்படாத கயிறு அருகில் சென்ற பைக் சக்கரத்தில் சிக்கியதோடு அதனை தாறுமாறாக இழுத்துச் சென்றுள்ளது.
இதனால் பைக்கில் சென்ற 2 பேர் காயமடைந்துள்ளனர். அதோடு ஜோதி ராமலிங்கம் என்பவரையும் பைக்கோடு சேர்த்து கயிறு இழுத்து சென்றதால் அவரும் படுகாயமடைந்துவிட்டார். மேலும் பேருந்தில் தொங்கிய நிலையில் இருந்த கயிறு ஈ. வி. கே. எஸ் சம்பத் சாலையில் காவல்துறையினரால் அமைக்கப்பட்டிருந்த இரும்புத் தடுப்பில் மாட்டி அதோடு சேர்த்து இழுத்துக்கொண்டு சென்றுள்ளது.
அப்போது போக்குவரத்தை சீர்படுத்தும் பணியில் ஈடுபட்டுகொண்டிருந்த காவலர் ஆதிசேசனும் கயிறில் சிக்கிகொண்டதால் அவருக்கும் படுகாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த சமயம் அதிர்ஷ்டவசமாக கயிறு அறுந்துவிட்டதால் ஆதிசேசன் உயிர் தப்பிவிட்டார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் ஆம்னி பேருந்து ஓட்டுனரான பரமேஸ்வரன் என்பவரை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.