Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அவங்க அதை செய்யல… முதல் நாளே விபத்துக்குள்ளான பேருந்து… சென்னையில் பரபரப்பு…!!

பேருந்து இயக்கப்பட்ட முதல் நாளே விபத்து நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக  தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அரசு சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் போன்ற நான்கு மாவட்டங்களில் மட்டும் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் பயணிகளை ஏற்றிக்கொண்டு திருநின்றவூரில் இருந்து பூந்தமல்லி நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்றுள்ளது. இதனையடுத்து பூந்தமல்லி நீதிமன்றம் எதிரே வந்து கொண்டிருந்த போது திடீரென பேருந்தின் முன்பக்க டயர் வெடித்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற கார் மற்றும் வேன் மீது மோதி விட்டது.

அதன் பின் அந்த பேருந்து சாலையின் நடுவே இருக்கும் தடுப்பு சுவரில் மோதி நின்றதால் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கி விட்டது. இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் கேசவன் உள்பட அதில் பயணித்த 5 பயணிகள் காயம் அடைந்தனர். இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இவ்வாறு பேருந்து போக்குவரத்து தொடங்கி முதல் நாளே விபத்து நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பேருந்து பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது முறையாக பராமரிக்காமல் இயக்கப்பட்டது  தான் இதற்கு முக்கிய காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Categories

Tech |