ஆப்பிரிக்காவில் கண்ணிவெடியில் மாட்டி பேருந்து வெடித்து சிதறியதில் பத்து நபர்கள் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர்.
புர்கினோ பாசோவில் கடந்த 2013 ஆம் வருடத்திலிருந்து பல தீவிரவாத அமைப்புகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அவர்கள் மேற்கொள்ளும் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகி வருகிறார்கள். லட்சக்கணக்கான மக்கள் பக்கத்து நாடுகளுக்கு குடிபெயர்ந்திருக்கிறார்கள்.
இந்நிலையில், கடந்த ஜனவரி மாதத்தில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. மேலும் தீவிரவாதத்தை அழிப்பதாகவும் அறிவிப்பு வெளியிட்டது. இருப்பினும், அங்கு தீவிரவாத தாக்குதல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில், புர்கினோ பாசோ நாட்டின் கிழக்கு பகுதியில் இருக்கும் படா கவுமா பிராந்தியத்தின் அருகில் ஒரு சிறிய பேருந்து சென்றிருக்கிறது.
அப்போது, அங்கு புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியில் மாட்டி பேருந்து வெடித்து சிதறியதில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஐந்து நபர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். பேருந்தில் இருந்த பயணிகள் சிலர் காணாமல் போனதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது.