சொகுசு பேருந்தின் முன்பகுதி பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து சொகுசு பேருந்து ஒன்று மதுரைக்கு புறப்பட்டுள்ளது. இந்த பேருந்தை முருகன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அவருடன் உதவியாக காளி என்பவரும் சென்றுள்ளார். இந்நிலையில் இந்த பேருந்து திருப்பூர் அருகே கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென பேருந்தின் முன்புறத்தில் இருந்து புகை வந்துள்ளது. இதனை பார்த்ததும் பேருந்தின் ஓட்டுனர் அதனை நிறுத்தி விட்டு கீழே இறங்க முயற்சி செய்துள்ளார். ஆனால் அதற்குள் தீ பேருந்தின் முன்பகுதி முழுவதும் பரவி விட்டது. இதனை அடுத்து ஓட்டுநரும், அவருடன் வந்த மற்றொரு நபரும் உடனடியாக கீழே இறங்கி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு பேருந்தில் பற்றி எரிந்த தீயை அணைத்து விட்டனர். ஆனால் இந்த தீ விபத்தில் பேருந்தின் முன்புற பகுதி எரிந்து நாசமாகி விட்டது. இந்த பேருந்தில் பயணிகள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.